கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய், ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை

(பொதுவான மக்களுக்காக எளிய மொழியில் விளக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட பல்வேறு ஆராய்ச்சி ஆவணங்களிலிருந்து தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

தற்பொழுது கொரோனா தொற்றுநோய்யை (COVID-19 ) ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் (SARS-COV-2) சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது, என்று ஒரு சதி கோட்பாடு உள்ளது. இந்த சந்தேகம் வர காரணம், SARS வைரஸ்களில் பணிபுரியும் கொரோனா வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகம் உள்ளூர் மீன் சந்தைக்கு அருகிலுள்ள வுஹானில் அமைந்துள்ளது தான்.
இந்த வைரஸ், கொரோனா மற்றும் ஹெர்பெஸ் ஆகிய இரண்டு வைரஸ்களிலிருந்து உருவாக்கப்பட்டது என்று மற்றொரு ஒரு கோட்பாடு இப்போது உலவி வருகிறது. இதை உண்மை என்று கருதி பொது மக்கள் மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் கூட ஆரம்பத்தில் ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கினர்.

சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எட்வர்ட் ஹோம்ஸ், கலிபோர்னியாவின் லா ஜொல்லாவின், ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் மற்றும் அவரது சகாக்கள் மற்றும் நியூ ஆர்லியன்ஸின் துலேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் கேரி ஆகியோர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஒரு கூட்டு ஆராய்ச்சி திட்டத்தை உருவாக்கி மெய்நிகர் தளங்களில் ஆராய்ச்சி தகவல்களை பரிமாறிக்கொண்டனர்.

அவர்களின் கண்டுபிடிப்புகள் நேச்சர்-மெடிசின், லான்செட் மற்றும் செல் போன்ற மிகவும் புகழ்பெற்ற சக மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் மிக உயர்ந்த தரவரிசை பெற்ற ஆவணங்களாக மாறியுள்ளன. பல வதந்திகளை அகற்றுவதற்காக, செல் பத்திரிகையில் உள்ள ஒரு ஆராய்ச்சி கட்டுரை பக்க வடிவமைப்புக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.

இப்போது, அவர்களுக்கு என்ன ஆதாரம் கிடைத்துள்ளது?

ஒரு புதிய வைரஸ் உருவாக இரண்டு வழிகள் உள்ளன:
(அ) இயற்கையில் மரபணுக்கள் மாறுவது
அதாவது எனது சில மரபணுக்களை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள், உங்களுடைய சிலவற்றை நான் எடுத்துக்கொள்கிறேன், அந்த வழியில் இரண்டு புதிய வகைகள் உருவாகின்றன, அவை நோயை உண்டாக்கும் அல்லது உண்டாக்காமலும் போகலாம்.

(ஆ) புதிய மரபணு மாற்றம் செய்து உருவாக்குவது

இந்த இரண்டு வழிகளில் முதல் வழியை ஆராய இந்த விஞ்ஞானிகள் (இப்போது சீனா, தென் கொரியா மற்றும் பிற நாடுகளில் உள்ள பல குழுக்களிடமிருந்து சான்றுகள் வந்துள்ளன) வுஹானில் இருந்த நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட SARS-COV-2 வைரஸின் மரபணுவை வரிசைப்படுத்தினர் (தொற்றுநோய் முதலில் ஆரம்பித்த இடம்). இந்த மரபணு தகவல்களை அறியப்பட்ட கொரோனா வைரஸ்களின் மரபணு தகவலுடன் ஓப்பிட்டு பார்த்தனர். சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் ஒற்றுமையாக செயல்படுவதால் மரபணு வரிசை தகவல்களை அதற்குரிய மரபணு வங்கிகளில் ஒப்படைத்து, அது அனைத்து விஞ்ஞானிகளுக்கும் கிடைக்குமாறு வழி வகுத்துள்ளனர். ஒப்பீட்டு ஆய்வில் வுஹான் வைரஸ் (பேட், எஸ்ஏஆர்எஸ்[SARS] மற்றும் மெர்ஸ்[ MERS] வைரஸ்களை போலவே) 50-90% ஒற்றுமைகளை பகிர்ந்து கொள்கிறது. வுஹான் மீன் சந்தையில் இருந்த இறந்த பாங்கோலினிலிருந்து பெறப்பட்ட வைரஸை மரபணு வரிசை செய்தபோது ஆச்சரியம் ஏற்பட்டது. SARS-Cov-2 மற்றும் பாங்கோலின் வைரஸ் ஒற்றுமையான வரிசை அமைப்பை கொண்டிருந்தன. வரிசையில் 12 நியூக்ளியோடைடுகள், ஒரு ஸ்பைக் புரதத்தை 4 அமினோ அமிலங்கள் சேர்ப்பதற்கு ஏற்றவாறு மாற்றவல்லது. இந்த சேர்த்தல் ‘ஃபுரின்’ என்ற நொதியை பிணைத்து குறிப்பிட்ட தளத்தில் வெட்டுவதற்கு உதவியது. எந்த கொரோனா வைரஸிலும் இந்த தளம் உருவாக்கப்படும் போது வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தொற்றுநோயாக மாறுகிறது, ஏனெனில் இப்போது வைரஸ் சுவாசக் குழாயில் உள்ள ஏசிஇ -2 (A.C.E-2) செல்களை மிகவும் இறுக்கமாக பிணைக்கவும் விடுவிக்கவும் மற்ற உயிரணுக்களுடன் பிணையவும் முடிகிறது. இந்த விஞ்ஞானிகள் பறவை காய்ச்சல் தொற்றுநோயிலும் இதேபோன்ற நிகழ்வை நினைவு கூர்ந்தனர்.அந்த விஷயத்தில் கூட, தனிமைப்படுத்தப்பட்ட வைரஸ் இந்த புதிய (Novel) அமைப்பை காட்டியது.

மனிதனால் உருவாக்கப்பட்ட கோட்பாட்டிற்கு எதிராகவும், இயற்கை மாற்றியமைத்த கோட்பாட்டிற்கு ஆதரவாகவும் மற்றொரு சான்று சர்க்கரை பிணைப்பு தளங்கள் ஆகும். புதிய (Novel) வைரஸில் சர்க்கரை இணைப்பு தளங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அவை வைரஸைச் சுற்றி மியூசின் போன்ற கவசத்தை உருவாக்குகின்றன. அத்தகைய கவசம் வைரஸை நோயெதிர்ப்பு தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. புள்ளி-பிறழ்வை(Point Mutation) செயற்கையாக ஏற்படுத்துவதன் மூலம் நியூக்ளியோடைடை சொருகுவது எளிதானது, ஆனால் சர்க்கரை இணைப்பு தளங்களை சொருக முடியாது. நெக்ஸ்ட்ஸ்ட்ரெய்ன்.ஆர்ஜில் (Nextstrain.org) ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்பட்டது, இது SAR-Cov-2 இல் எச்.ஐ.வி வைரஸைப் போன்ற சில சொருகல்கள் இருப்பதாகக் கூறியது. ஆனால், சுவிட்சர்லாந்தில் உள்ள பாஸல் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் எம்மா ஹோட்கிராஃப்ட் அவர்கள், இந்த ஆராய்ச்சி கட்டுரை தவறான அறிவியல் என்று சுட்டிக்காட்டி, இது மிகச்சிறிய மற்றும் முக்கியத்துவம் இல்லாத ஒற்றுமைகள் என்பதால் அதிக எண்ணிக்கையிலான வைரஸ்கள் மத்தியில் காணப்படலாம் என்று கூறினார். கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு, அந்த ஆராய்ச்சி கட்டுரை திரும்பப் பெறப்பட்டது. SARS-Cov-2 ஹெர்பெஸ் வைரஸுடன் ஒற்றுமை கொண்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இறுதியாக, உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் குழு( சீனா தவிர்த்து) இந்த வைரஸ், பேட் மற்றும் பாங்கோலின் வைரஸ்களின் கலவையாக இருக்கலாம், ஆனால் இயற்கையில் உருவாகி, ஒரு இனத்திலிருந்து மற்றொன்றுக்கு வந்துள்ளது (இரண்டு வைரஸ் அல்ல)

பாங்கோலின், பாலூட்டி வகையை சார்ந்த இரவு நேர விலங்கு, இந்தியாவில், குறிப்பாக இமயமலை, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென்னிந்தியாவில் காணப்படுகிறது. தமிழ் குடியேற்றங்கள் உள்ள தமு, மணிப்பூரில் உள்ள மோரே தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்கள், ஒடிசாவின் பெர்ஹாம்பூர் மற்றும் பிற இடங்களில் உள்ளவர்கள் இந்த சங்கிலி அமைப்பில் முக்கியமான இணைப்பை உருவாக்குகின்றனர். இந்தியாவிலிருந்து மியான்மர் வழியாக சீனாவிற்கு பங்கோலின் கடத்தப்படுவதாக செய்திகள் வந்துள்ளன, ஏனெனில் அதன் செதில்கள் மற்றும் இறைச்சிக்கு மிக உயர்ந்த விலையை (சராசரியாக 40,000 அமெரிக்க டாலர்) பெறுகிறது. ஒரு மதிப்பீட்டின்படி, 2009 முதல் 2017 வரை சுமார் 6000 பாங்கோலின்கள் கடத்தப்பட்டுள்ளன.

மேலும் விஞ்ஞானிகள் குழு, இதுபோன்ற ஒரு விஷயம் இயற்கையில் நடக்கக்கூடும் என்றால், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏன்என்றால் இது அடிக்கடி நிகழக்கூடும் என்பதை சுட்டிக்காட்டினர். இந்த குழு இரண்டு உடனடி நடவடிக்கைகளை வழங்கியது:

(அ) எந்த வனவிலங்குகளையும் (குறிப்பாக பறவைகள்) ‘ஈரமான சந்தையில்’ (மீன் சந்தை போன்றவை) அனுமதிக்கக்கூடாது.

(ஆ) உயிரியலாளர்கள் பல்வேறு வனவிலங்குகள் மற்றும் பறவைகளை தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ்கள் குறித்து மரபணு ஆய்வுகள் செய்ய வேண்டும். மரபணு பரிணாம ஆய்வுகள் சிறந்த கட்டுப்பாட்டு உத்திகளை வரையறுக்க உதவும்.

 


தமிழாக்கம்
டாக்டர் .மு. ராஜலட்சுமி